டி20 கிரிக்கெட் – வங்கதேசத்தை தொம்சம் செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி. கடந்த செப்.23ம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
சீனாவில் 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் ஆசிய போட்டிகளில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. அந்தவகையில், இந்தியா இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை பெற்று, பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதனிடையே, ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதன்படி, கடந்த 3ம் தேதி நேபாளம் அணிக்கு எதிரான கலியுறுத்தி போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில், இன்று வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியது. சீனாவில் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சாய் கிசோர் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் எளிதான இலக்கை நோக்கி பேட்டிங் இறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9.2 ஓவரிலேயே 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ருத்ராஜ் 26 பந்துகளில் 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெரும் அணி நாளை இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும். ஏற்கனவே இந்திய மகளிர் அணி டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணியை வீழ்த்தி தங்கம் வென்ற நிலையில், நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் வென்று இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகிறது.