‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!
விராட் கோலி கழுத்து வலி காரணமாகவும், கே.எல்.ராகுல் முழங்கை பிரச்சனை காரணமாகவும் ராஞ்சி கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடவில்லை என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான விளையாட்டு திறனை அடுத்து வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கிய கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்பதாகும்.
உள்ளூர் போட்டிகளில் மாநில அணிகள் சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி, ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா சௌராஷ்டிரா அணிக்காகவும், சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும் விளையாட உள்ளனர். ராஞ்சி கோப்பை தொடர் வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பிப்ரவரி மாதம் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ளதால் அதற்குள் நடக்கும் ராஞ்சி தொடரில் இவர்கள் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் உடல்நல பிரச்சனைகளை மேற்கோள் காட்டி ராஞ்சி தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
விராட் கோலிக்கு கழுத்துவலி காரணமாக அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும், கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை காரணமாக அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் பிசிசிஐ மருத்துவ குழு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோலி டெல்லி அணி சார்பாகவும், கே.எல்.ராகுல் கர்நாடகா அணிக்காகவும் களமிறங்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.