கேப்டனாக சூர்யாவுக்கு எல்லா தகுதியும் இருக்கு…ஹர்திக் கிட்ட அது சவாலா இருக்கு -அஜித் அகர்கர்!!
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் எனவும், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடிய போதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை பற்றி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பேசியிருக்கிறார்.
இன்று (ஜூலை-22) காலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய அஜித் அகர்கர் ” இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஏனெனில் அவர் மிகவும் உடல் தகுதியான வீரராக இருக்கிறார் என்பதால் தான். டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கருத்துக்களைப் பெற்று வருகிறோம்.
அதன்படி கிடைத்த கருத்துக்கள் அனைத்தும் சூர்யகுமார் யாதவ் பற்றி பாசிட்டிவாக தான் வருகிறது. அந்த அளவுக்கு அவருக்கு கிரிக்கெட் பற்றிய அறிவுகள் நிறையவே இருக்கிறது. அவர் உலகின் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர், மேலும் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடியவர்.
அதே சமயம் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியில் மிகவும் முக்கியமான ஒரு வீரர். பல விஷயங்களை கண்டுபிடிக்க மிகவும் நல்ல திறன்கள் அவரிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இருப்பினும், அவருக்கு இப்போது உடற்தகுதி என்பது தான் பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. இதன் காரணமாக தான் இப்படியான ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கேப்டனாக வெற்றி பெற தேவையான எல்லா தகுதியும் சூர்யாவிடம் இருக்கிறது.” எனவும் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.