இன்று தொடங்கும் சூப்பர் 8 சுற்று ..! அரை இறுதிக்கு எப்படி தகுதி பெறுவார்கள் தெரியுமா?
சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது.
கடந்த ஜூன்-2 தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு வந்தடைந்துள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொண்ட 20 அணிகளை, ஐந்து அணிகளாக, 4 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்குள் போட்டிகளை நடத்தி அந்த பிரிவுகளில் முதல் 2 இடத்தை பிடித்திருக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
அப்படி, 20 அணிகளிலிருந்து தற்போது 8 அணிகள் மாத்திரம் இந்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் பிரிவு -1 (Group -1)ல் இந்தியா. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளும் பிரிவு -2ல் இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு அணி பிரிவுகளுக்குள் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதவேண்டும்.
இறுதியில், பிரிவுகளில் புள்ளிபட்டியலில் இடம்பிடிக்கும் முதல் இரண்டு அணிகள் மட்டுமே அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில், முதல் பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை இரவு 8 மணிக்கு ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளது.
இந்த டி20 தொடரின் 43-வது போட்டியானது பார்பதாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், போட்டி தடைபடுவதற்கான அதிக அளவிலான மழை இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியும், இந்த உலகக்கோப்பை தொடரின் 41-வது போட்டியுமாக அமெரிக்கா அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொங்கிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை அதே நேரம் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.