மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதிராபாத் அணி மிரட்டல் இன்னிங்ஸை பதிவு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எதுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 106 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார். கிளாசன் 34, நிதிஷ் ரெட்டி 30, அபிஷேக் சர்மா 24 ரன்கள் எடுத்து இருந்தனர். ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை இன்று ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. முதல் இடத்திலும் 287 ரன்களுடன் ஹைதராபாத் அணிதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 20 ஓவரில் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தது . சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் மட்டும் ஒரு பக்கம் போராடி வந்தனர். சஞ்சு 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசி ஹர்ஷத் படேல் பந்தில் அவுட் ஆகி வெளியேற துருவ் ஜுரல் 35 பந்தில் 70 ரன்கள் விளாசி ஜாம்பா பந்துவீச்சில் அவுட் ஆகினார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. ஆட்ட நாயகனாக ஐபிஎல் 2025-ன் முதல் சதம் விளாசிய இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டார்.