இது ஒரு லேர்னிங்.. ஆரம்பத்திலேயே தோல்வியை பாத்தது நல்லது… சுப்மன் கில்!

Shubman Gill

Shubman Gill: இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ரொம்ப நல்லது என்று நினைக்கிறன் என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளிலும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டியில் களம் கண்டது.

அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி அபார இலக்கை நிர்ணயம் செய்தது.

அதன்படி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 206 ரன்களை குவிந்தது. இதனைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியாக 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதிரடியாக விளையாடிய சிவம் துபே இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது, இப்போட்டியில் சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் அற்புதமாக செயல்பட்டனர்.

ஒரு பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது முதல் 6 ஓவரில் நன்றாக செயல்படுவது அவசியம். அதனால் பவர்பிளேயில் நல்ல ஸ்கோரைப் பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுதான் இந்த போட்டியில் நடந்தது.

இது எங்களுக்கு துரதிருஷ்டமாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை 10-15 ரன்கள் வித்தியாசம் தான் வெற்றியை முடிவு செய்யும். எனவே, இந்த போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம். இது எங்கள் வீரர்களுக்கும் அணிக்கும் ஒரு அனுபவம் தான். குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு சிறந்த கற்றல் என்று நினைக்கிறேன். இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ரொம்ப நல்லது என்று நினைக்கிறன்.

ஏனென்றால், இந்த தொடரின் நடுவிலோ அல்லது கடைசி நேரத்திலோ இது போன்ற தோல்வி ஏற்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என கூறிய கில், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளோம். ஒரு கேப்டனாக நான் நிறைய கற்று வருகிறேன். இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்