டக்வொர்த் லீவிஸ் (DLS) முறையில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!
உலகக்கோப்பை தொடரில் 35-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கான்வே, ரச்சின் ரவீந்திரன் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் நிதானமாக விளையாடி வந்த கான்வே 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கேப்டன் வில்லியம்சனுடன் கைகோர்த்தார் ரச்சின் ரவீந்திரன் இருவரும் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியை திணறவைத்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் சதத்தை தவற விட்டு 79 பந்தில் 95 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் கூட்டணியில் 180 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரன், கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆன அடுத்த இரண்டு ஓவரில் 108 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இறங்கிய சாப்மேன் 29, டேரில் மிட்செல் 39, க்ளென் பிலிப்ஸ் 41 மற்றும் சான்ட்னர் 26* ரன்கள் விளாச இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 4 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். இதற்கிடையில் பாகிஸ்தான் அணி 21.3 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து இருந்தபோது பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது களத்தில் ஃபகார் ஜமான் 106* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 47* ரன்களுடனும் இருந்தனர். மழை நின்ற உடன் மீண்டும் போட்டி தொடங்கியது. பின்னர் DLS முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 41 ஓவர்களுக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் மீதம் உள்ள 19.3 ஓவருக்கு 182 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 26 -வது ஓவர் வீசும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 1 விக்கெட் இழந்து 200 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் ஃபகார் ஜமான் 126* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 66* ரன்களுடனும் இருந்தனர். பாகிஸ்தான் வெற்றி பெற 93 பந்தில் 142 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் (DLS) முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
புள்ளி பட்டியலில் இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளது.