முதல் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது இலங்கை மகளீர் அணி ..!! இந்திய அணியை வீழ்த்தி அபாரம்!!
மகளீர் ஆசிய கோப்பை : கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினார்கள். ஆனால், ஸ்மிருதி மந்தானா ஒரு முனையில் நிலைத்து விளையாடி 60 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் ரிச்சா கோஸ் இறுதி கட்டத்தில் 14 பந்துக்கு 30 ரன்கள் எடுத்தார். இந்த அதிரடி கேமியோவால் ஸ்கோர் சற்று உயர்வை கண்டது. இறுதியில், 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதிமந்தனா 47 பந்துக்கு 60 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கை மகளிர் அணியில் கவிஷா தில்ஹரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இலங்கை மகளிர் அணி.
2-வது ஓவரிலேயே தொடக்க வீராங்கனையான விஷ்ணு குணரத்நே ஒரு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த அத்தப்பத்து மற்றும் ஹர்ஷிதா இருவரும் இணைந்து கூட்டணி அமைத்து பொறுமையாக விளையாடினார்கள்.
இந்த நங்கூரக் கூட்டணியை கலைப்பதற்கு இந்திய அணியும் பல முயற்சிகளை செய்தும் எதுவும் கை கொடுக்கவில்லை. ஆனால் 12-வது ஓவரில் அத்தபத்து 61 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஹர்ஷிதா 69* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கவிஷா தில் ஹரி 16 பந்துக்கு 30* ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. லீக் சுற்று, நாக்-அவுட் போட்டி என எதிலும் தோல்வி அடையாத இந்திய அணி இப்படி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய மகளிர் அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் அமைந்துள்ளது.