இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி..!
இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி டி20 போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியில் தொடக்க வீரராக தவான், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.
தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய, பாடிக்கல், 9 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 82 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் அடுத்ததுடுத்து அவிஷ்கா பெர்னாண்டோ 12 , பானுகா 18 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா சிறப்பாக விளையாடினர்.
இறுதியாக இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.