SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 44 பந்தில் 9 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள் விளாசி 71 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக அபினவ் மனோகர் 37 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்களான டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷான் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் குமார் ரெட்டி (2), அனிகேத் வர்மா (12) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட் ஆகினார். இன்னொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்தில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 70 ரன்கள் எடுதது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
வில் ஜேக்ஸ் 22 ரன்னில் அவுட் ஆக, சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 40 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெற செய்தார். 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.