SRH vs GT: அலறவிட்ட சுப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!
ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் ஆடியுள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.ஹெட் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
கிளாசென் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கமிந்துவால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அனிகேத் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி சார்பாக, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் நான்கு விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து, 153 எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நிர்ணயம் செய்தது. பின்னர், இந்த ஈஸியான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி சார்பாக, கேப்டன் சுப்மன் கில் 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது இன்னிங்ஸில் ஒன்பது பவுண்டரிகளை அடித்தார்.
ரூதர்ஃபோர்டு 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில், 16.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி தரப்பில் ஷமி இரண்டு விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும். மறுபுறம், ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் ஆடியுள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.