SRH-க்கு ‘ஷாக்’ கொடுத்த தாக்கூர்! லக்னோ முதல் வெற்றியை ருசித்தது எப்படி?
300 ரன்கள் இலக்காக வைத்து விளையாடிய SRH அணி இறுதியில் 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை LSG அணி 16.1 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது.

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே 20 ஓவரில் 286 ரன்கள், அடுத்த போட்டியில் 300 ரன்கள் தான் இலக்கு என SRH அணி துணிச்சலாக பேசி வந்த நிலையில், அந்த அணியை சைலண்டாக சம்பவம் செய்துள்ளது லக்னோ. இந்த வெற்றி SRH அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கே ஷாக் தான்.
முதல் பேட்டிங் செய்தால் SRH அணி ரன்களை குவிக்கும் என்று ஒரு கூற்று இருந்த நிலையிலே, டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தைரியமாக தேர்வு செய்தார். அதனை அடுத்து 300 ரன்கள் இலக்கோடு SRH அணி களமிறங்கியது. ஆனால் ஆரம்பமே பேரிடி போல அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை 3வது ஓவரில் தட்டி தூக்கினார் ஷர்துல் தாக்கூர், அடுத்து 8வது ஓவரில் பிரின்ஸ் யாதவ், அதிரடி பேட்டிங் விளையாட தொடங்கிய டிராவிஸ் ஹெட் விக்கெட்டை பறித்தார்.
Lord தாக்கூரின் தாக்கம் :
ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தான் வீசிய முதல் ஓவர்களிலேயே அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். அடுத்து அபினவ் மனோகர் , முகமது ஷமி ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய தாக்கூர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
பூரானின் அதிரடி ஆட்டம் :
லக்னோ அணியின் நட்சத்திர வீரர் நிகோலஸ் பூரான் 26 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும், இந்த சீசனின் வேகமான அரைசதத்தை வெறும் 18 பந்துகளில் பதிவு செய்தார். அவரது அதிரடி SRH பந்துவீச்சாளர்களை திணறடித்தது.
லக்னோவின் தொடக்கம் :
பூரானின் அதிரடிக்கு தொடக்கமாக அமைந்தது, தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தது. இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து LSG-யின் பேட்டிங்கை பலப்படுத்தினர்.
போராடிய பேட் கம்மின்ஸ் :
SRH அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் 4 பந்துகளில் 18 ரன்கள் (3 சிக்ஸர்கள்) அடித்து அணியை 200 ரன்களுக்கு அருகில் கொண்டு செல்ல முயன்றார். ஆனால், அவரது விக்கெட் வீழ்ந்த பிறகு அது சாத்தியமாகவில்லை. பந்துவீச்சில் பூரான் மற்றும் மார்ஷ்-ஐ வீழ்த்தினாலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
SRH முன்னாள் வீரரின் சம்பவம் :
லக்னோ அணியின் அப்துல் சமத், தனது முன்னாள் அணியான SRH-க்கு எதிராக 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து, வெற்றியை உறுதி செய்தார். இவர் 2020 முதல் SRH அணியில் விளையாடி வந்த நிலையில் இந்த வருட ஐபிஎல்-ல் தான் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார்.
300 ரன்கள் இலக்காக வைத்த ஹைதராபாத் அணி இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை லக்னோ அணி 16.1 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஐபிஎல்-ல் பலம் வாய்ந்ததாக கருதப்படும் SRH அணிக்கு எதிராக தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்.