சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!
இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாமிபியான்ஸ் டிராபி இறுதி போட்டியில் இதேபோன்ற இறுதி போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. அடுத்து 2019-ல் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் மீண்டும் ஐசிசி ஒருநாள் நாக் அவுட் போட்டியில் இந்தியா – நியுசிலாந்து அணிகள் மோதவுள்ளதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதில் சிலர் இந்த விருப்பத்தை நிறைவேற்றி தருமாறு கடவுளிடம் வேண்டி வருகின்றனர். இது தொடர்பாக நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, சிவாஜி நகரில் உள்ள விநாயகர் கோயிலில் இந்தியா வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி பாக்லாமுகி கோவிலில் ரசிகர்கள், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் இந்திய கிரிகெட் வீரர்களின் படங்களை வைத்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
உத்திரபிரதேசம் லக்னோவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா வெற்றி பெற வேண்டும் என யாகம் நடத்தி பூஜை நடத்தினர். அப்போது அவர்கள் கையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சமி ஆகிய வீரர்களின் புகைப்படங்கள் இருந்தன. இதே போல இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.