தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி…போராடி தோற்ற பாகிஸ்தான் ..!
ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இன்று 26-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் தடுமாறி விளையாடினர். பின்னர் அப்துல்லா ஷபீக் 9 , இமாம்-உல்-ஹக் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் கூட்டணி சற்று அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த ரிஸ்வான் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் விளையாடிய பாபர் அசாம் தனது அரை சத்தை பூர்த்தி செய்த உடனே பெவிலியன் திரும்பினார்.
இருந்தாலும், பின்னர் வந்த சவுத் ஷகீல் அரைசதம் அடித்து 52 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 271 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டெம்பா பாவுமா, குயின்டன் டி காக் களமிறங்கினர். முந்தைய போட்டியில் சதம் விளாசிய குயின்டன் டி காக் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த டெம்பா பாவுமா 28 ரன்னில் வெளியேறினார். பின்னர் களம் கண்ட ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாட தொடங்கினர். ஒருபுறம் மார்க்ராம் விளையாட மறுபுறம் தென்னாபிரிக்கா அணி விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. அதன்படி ஹென்ரிச் கிளாசென் 12, டேவிட் மில்லர் 29, மார்கோ ஜான்சன் 20, ஜெரால்ட் கோட்ஸி 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப சிறப்பாக விளையாடி வந்த ஐடன் மார்க்ராம் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் அடங்கும்.
இறுதியாக தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 271 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டையும், ஹரிஸ் ரவூப், முஹம்மது வசீம், உசாமா மிர் 2 விக்கெட்டை பறித்தனர்.