நியூசிலாந்து தோல்வியால் அரையிறுதிக்கு சென்ற தென்னாப்பிரிக்கா..!
இன்று நடந்த நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் (DLS) முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இதனால் புள்ளி பட்டியலில் இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் போது புள்ளி பட்டியலில் இந்திய அணி 14 புள்ளிகளும், தென்னாபிரிக்க அணி 12 புள்ளிகளும் பெற்று முதல் 2 இடங்களில் இருந்தது. இந்நிலையில், நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு 2-வது அணியாக தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் தகுதி பெற்றது. பெங்களூருவில் இன்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வது உறுதியானது.
இனி வரும் போட்டிகளில் எந்த அணிகள் 12 புள்ளிகள் எடுக்கிறதோ அந்த அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த இரு அணிகளும் இனி வரும் அனைத்து போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன.
ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். அதேசமயம் ஆஸ்திரேலியா அணி 6 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்று வரும் போட்டியிலும், மீதமுள்ள 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் கிடைக்கும்.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவினால் கூட மீதம் உள்ள 2 போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ள 2 போட்டியில் தோல்வியை சந்தித்தால் மட்டுமே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.