#T20WorldCup: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!
தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்றைய முதல் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்கா, குசல் பெரேரா களமிறங்கினர். நிஸ்ஸங்கா சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்க்க, மறுபுறம் குசல் பெரேரா 7 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி அடித்த நிலையில், 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன்பின்னர், பானுகா ராஜபக்ச, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா சொற்ப ரன் எடுத்து அடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரர் நிஸ்ஸங்கா சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 72 ரன் குவித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் ஷம்சி , ட்வைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பறித்தனர். 143 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்தில் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கபட்ட நிலையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 12, குயின்டன் டி காக் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து களம் கண்ட ராஸ்ஸி வான் டெர் வந்த வேகத்தில் 16 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர், கேப்டன் பாவுமா , ஐடன் மார்க்ராம் இருவரும் ஜோடி சேர்ந்து சீராக ரன் சேர்ந்தனர். நிதானமாக விளையாடிய ஐடன் மார்க்ராம் 19 ரன்னில் ஹசரங்க ஓவரில் போல்ட் ஆனார். அடுத்த விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த பாவுமா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் 46 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இறங்கிய டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்த பந்திலே ராஜபக்சேவிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், மில்லர் 2 சிக்ஸர், ராபடா 1 பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை 3 போட்டிகளில் 2 போட்டியில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் உள்ளது.