சதத்தை உதறி தள்ளிய ஷ்ரேயாஷ்.! விராட் கோலியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்?
நேற்றைய போட்டியில் சதத்தை விட்டுக்கொடுத்த பஞ்சாப் வீரர் ஷ்ரேயாஷ் ஐயரின் செயலை குறிப்பிட்டும் விராட் கோலியை குறிப்பிட்டும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த போதிலும், கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை தனது அணியின் அதிரடி வீரர் ஷாஷாங்க் சிங்கிடம் விட்டுக்கொடுத்தார்.
ஷாஷாங்க் சிங், அந்த ஓவரில் முகமது சிராஜை எதிர்கொண்டு அடுத்தடுத்து விளையாடி 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து, அணியின் மொத்த ஸ்கோரை 243ஆக உயர்த்தினார். இதன் மூலம் இதனை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி அந்த டார்கெட்டை எட்ட முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது.
ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகவும் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவர் தனது தனிப்பட்ட சாதனையான சதத்தை விட அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஷாஷாங்க் சிங்கை அதிரடியாக அவரது பாணியில் விளையட கூறியது பாராட்டப்பட்டாலும், ஒரு சில ரசிகர்கள் இதை விராட் கோலியுடன் ஒப்பிட்டு விமர்சித்தும் வருகின்றனர். சமூக ஊடகங்களில், “ஷ்ரேயாஸ் ஐயர், தனது அணியின் ரன் அதிகரிப்பதற்காக சதத்தை தியாகம் செய்தார், ஆனால் விராட் கோலி சதம் அடிப்பதையும், தனது ஸ்கோர் உயர்வதையுமே முக்கியமாக கருதி ஆடுவார்” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷாஷாங்க் சிங் போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில், “ஷ்ரேயாஸ் முதல் பந்திலிருந்தே என்னை ஊக்கப்படுத்தினார். ‘எனது சதத்தை பற்றி கவலைப்படாதே, நீ அதிரடியாக உனது பாணியில் விளையாடு’ என்று கூறினார். அவரது இந்த பேச்சு எனக்கு உத்வேகம் அளித்தது.” என்று பாராட்டினார். ஷ்ரேயாஸ் ஐயரும், போட்டி முடிந்த பிறகு ஷாஷாங்கை பாராட்டி, தனது சதத்தை இழந்ததற்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை சைகையால் காட்டினார்.
ஆனால், ரசிகர்களின் ஒரு பிரிவு, விராட் கோலியை விமர்சித்து, “கோலி தனது சொந்த ரன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியின் நலனை புறக்கணிக்கிறார்” என்று தேவையற்ற ஒப்பீட்டு விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேநேரம் மறுபுறம், விராட் கோலியின் ஆதரவாளர்கள், “கோலி தனது சதங்களால் அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவரது அணுகுமுறை வேறு, ஷ்ரேயாஸின் முடிவு வேறு” என்று பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.