ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் சதம் விளாசல்: விண்டிஸ் அணிக்கு 318 ரன் இலக்கு..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் படையும் , வெஸ்ட்இண்டீஸ் அணி மகளிர் படையும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த யாஸ்திகா பாட்டியா 7 வது ஓவர் வீசிய ஷகேரா செல்மனிடமே கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 5 ரன் எடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர், களமிறங்கிய தீப்தி சர்மா வந்த வேகத்தில் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி 78 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அணி மோசமான நிலையில் சென்றபோது மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். இதைதொடர்ந்து, ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் இருவரும் கூட்டணி அமைத்து வெஸ்ட்இண்டீஸ் அணி அணியை திணறவைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகள் திணறினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி 123 ரன் எடுத்து குவித்தார். இதில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும். அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். பின்னர், இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 107 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 317 ரன்கள் எடுத்து. வெஸ்ட்இண்டீஸ் அணி 318 ரன் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.