SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் கமிந்து 99 வருட வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார்.
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி, நியூஸிலாந்து அணி பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தனர். கடுமையான பந்து வீச்சை கொண்ட நியூஸிலாந்து அணி இலங்கை அணியின் முதல் விக்கெட்டை விரைவாக எடுத்துவிட்டு, அடுத்தடுத்த விக்கெட்டுக்கு திணறியது.
இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் சந்திக்காமல் நியூஸிலாந்து பவுலர்களை விளையாடி வந்தனர். இலங்கை அணியில், சண்டிமால் 116 ரன்களும், கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குஷல் மென்டிஸ் 102 ரன்களும் எடுத்து இலங்கை அணியின் ஸ்கோரை உச்சம் பெற செய்தனர்.
அதிலும் கமிந்து மென்டிஸ் அடித்த சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்ச இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே போல முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் ரோய் டயஸ் 23 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார்.
ஆனால், மென்டிஸ் இந்த சாதனையை 13 இன்னிங்ஸில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சக வீரர்களான மேத்யூஸ் 88 ரன்களும், கருணாரத்னே 46 ரன்களும், டி சில்வா 44 ரன்களும் எடுத்தனர்.
இதனால், முதல் நாளிலே இலங்கை அணி வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது. அதன்படி, 163.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் எடுத்திருந்த போது இங்கை அணி இன்னிங்ஸ் டிக்ளேரை அறிவித்ததது.
இதனால், அடுத்தபடியாக நியூஸிலாந்து அணி போட்டியின் இரண்டாம் நாளில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். துரதிஷ்டவசமாக நியூஸிலாந்து அணிக்கு அந்த நாள் சரியாக போகவில்லை. இலங்கை அணியின் லாபாத் ஜெயசூர்யாவின் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து அணி வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதனால், இலங்கை அணி 514 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்ததால் இலங்கை அணி நியூஸிலாந்து அணிக்கு ‘follow on’ கொடுத்தது.
இதனால், நியூஸிலாந்து அணி மீண்டும் பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, இன்று நடைபெற்ற 3-ஆம் நாள் ஆட்டத்திலும் நியூஸிலாந்து அணி, இலங்கை அணியின் பந்து வீச்சு சற்று தடுமாறியே விளையாடி வருகிறது. இருந்தாலும், டெவோன் கான்வே 61 ரன்கள், கேன் வில்லியம்சன் 46 ரன்கள், டாம் ப்ளன்டெல் 47 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 32 ரன்கள் எடுத்துள்ளனர்.
அதில், ப்ளன்டெலும், பிலிப்ஸ்ஸும் களத்தில் விளையாடி வருகின்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய இலங்கை வீரர் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
நியூஸிலாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் இன்றைய நாள் நிறைவடைந்தது. மேலும், இந்த போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.