CSK vs MI : மும்பையை ‘போராடி’ வீழ்த்திய சென்னை! போட்டியின் சுவாரஸ்ய சம்பவங்கள்…,
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. இதில் தோனியின் அதிவேக ஸ்டம்பிங், தோனி என்ட்ரி என ரசிகர்களை ஆரவாரப்படுத்திய பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன.

சென்னை : நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ் விளையாடிய மும்பை வீரர்கள் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும், தீபக் சாகர் 28 ரன்களும் எடுத்திருந்தனர். சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளர்களான நூர் அகமது (4/18) மற்றும் கலீல் அகமது (3/29) ஆகியோர் மும்பையின் பேட்டிங் வரிசையை சிதறடித்தனர்.
பின்னர், 156 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வேகமான அணிக்கு நல்ல தொடக்கத்தைஅளித்தார்.
எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று இருந்த சென்னை அணியை தடுமாற வைத்தவர் விக்னேஷ் புத்துர் எனும் அறிமுக வீரர். அவர் வீசிய சூழலில் அரைசதம் விளாசிய ருதுராஜ், ‘ஆறு சாமி’ சிவம் துபே , தீபக் ஹூடா எனும் முக்கிய விக்கெட்களை பறித்து ரசிகர்களை ஜெர்க் ஆக்கிவிட்டார். இறுதியில் 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் :
போட்டியை காண வந்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் காண கிடைத்தது. மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவை 29 ரன்கள் எடுத்திருக்கையில் நூர் அகமது வீசிய 11வது ஓவர் பந்தை எதிர்கொண்ட போது தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். இது சேப்பாக்கம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது,
‘தல’ என்ட்ரி :
விக்கெட்டுகள் சரிந்தால் கவலை கொள்ளும் ரசிகர்கள் மத்தியில் சென்னை அணியில் மட்டும் மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சரிந்தால் ஆரவாரம் ஆர்ப்பரிக்கும். ஏனென்றால் தல தோனி எப்போது பேட் உடன் மைதானத்தில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்நோக்கி காத்திருந்தனர். 19வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட் ஆகி வெளியேற தோனி என்ட்ரி கொடுக்கும் போது அரங்கின் சத்தம் 122 டெசிபலை கடந்தது. இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி ரன் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தை முடித்துவைத்தார்.
30 கோடி பேர் :
எல் கிளாசிகோ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் CSK vs MI போட்டியை ஜிவ் ஹாட்ஸ்டாரில் 31.1 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இது ஆட்டத்தின் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட எண்ணிக்கையாகும். மொத்த எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மும்பை அணிக்கு தொடர் ‘முதல்’ தோல்வி :
இந்த வெற்றியுடன், சென்னை தனது ஐபிஎல் 2025 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது, அதே நேரத்தில் மும்பை அணி தங்களது முதல் போட்டியை வெல்ல முடியாத தொடர் தோல்வியை மீண்டும் பதிவு செய்துள்ளது. கடந்த 2012 முதல் 13வது முறை ஐபிஎல் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வி கண்டு வருகிறது.