மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய ‘No.1’ கில்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் பாக். வீரர் பாபர் அசாம் உள்ளார்.

டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் கில் :
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டி தொடங்கும் முன்னரும் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 773 புள்ளிகள் உடன் உள்ளார்.
3வது இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 761 புள்ளிகளுடன் இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா வீரர் கால்சன் (756 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல் (740 புள்ளிகள்) , இந்திய வீரர் விராட் கோலி (727 புள்ளிகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர் தரவரிசை :
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் பட்டியலில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்ஷணா 680 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 669 புள்ளிகளுடன் உள்ளார். இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறவில்லை என்பதால் ரஷீத் கான் புள்ளிபட்டியலில் விரைவாக முன்னேறி மீண்டும் முதலிடத்திற்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமீபியா வீரர் பெர்னாட் ஸ்கூல்ட்ஸ் 662 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 652 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி 642 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.