பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!
இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதில் திருப்தி அடையாத இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், 'நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னதாகவே வென்றிருக்கலாம்' என்று கருத்து கூறியிருக்கிறார்.

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட்டாகி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் அவருடன் இணைந்து 114 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவை வெற்றிக்கு வழிவகுக்க செய்தனர். இதில், ஐயர் 67 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், போட்டி முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “இந்தியா போட்டியை சற்று முன்னதாகவே முடித்திருந்தால் அது ஒரு உறுதியான வெற்றியாக இருந்திருக்கும்” என்றார். போட்டியின் முடிவில், ஏழு ஓவர்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், உங்களுக்கு போதுமானதாக இல்லையா? என்று நிபுணர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு உறுதியான வெற்றியாக இருந்திருக்கும். நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடியிருந்தால், இன்னும் சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம்” என்றார். மேலும், பந்து வீச்சு முழுவதும் தன்னை தொந்தரவு செய்ததற்காக பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை அவர் பாராட்டினார்.