சிவம் சிங் அதிரடி..! திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs Trichy போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணியளவில் தொடங்கிய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் சிவம் சிங், விமல் குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் விமல் குமார் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின், பாபா இந்திரஜித் களமிறங்க, அதிரடியாக விளையாடிய சிவம் சிங் அரைசதத்தை தவறவிட்டு 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா கணேஷ் உடன் பாபா இந்திரஜித் இணைந்து நிதானமாக விளையாடினார்.
இறுதியில் சுபோத் பதி மற்றும் ஆதித்யா கணேஷ் களத்தில் இருக்க, 14.5 ஓவரில் 122 ரன்கள் எடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 46 ரன்களும், பாபா இந்திரஜித் 22 ரன்களும், ஆதித்யா கணேஷ் 20* ரன்களும் குவித்துள்ளனர்.