உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஷமி…

Mohammed Shami

நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும்,  இலங்கை அணியும் மோதியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் சுப்மான் கில் 92, விராட் கோலி 88, ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் வேகப்பந்து அட்டாக்கை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.

முதல் ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டை தொடங்கி வைக்க, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி முடித்து வைத்தனர். இதனால், இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி.. தொடர் வெற்றியில் இந்தியா… !

இதனால், இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 2011, 2015, 2019, 2023 ஆகிய 4 உலக கோப்பை தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறி இந்திய அணி சாதனை படைத்தது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 7லும் வென்று சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்தியாவின் நட்சத்திர வீரர் முகமது ஷமி சாதனை மேல் சாதனையை படைத்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் , பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 5 ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி ஆட்டநாயகனாக தேர்வானார்.

இதில் குறிப்பாக உலகக்கோப்பை தொடர்களில் அதிகமுறை 4க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்தார் முகமது ஷமி. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 14 இன்னிங்ஸில் 7 முறை 4க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. இவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் 24 இன்னிங்ஸில் 6 முறை 4க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் முகமது ஷமி 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதில் குறிப்பாக உலகக்கோப்பை வரலாற்றில் முகமது ஷமி 3வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிட்செல் ஸ்டார்கின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அதன்படி, இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்களில் அதிகபட்சமாக 23 இன்னிங்ஸ்களில் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகளையும், 33 இன்னிங்ஸ்களில் ஜவஹல் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், தற்போது முகமது ஷமி வெறும் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலான சாதனை படைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்