குறைந்த போட்டியில் புதிய சாதனை படைத்த ஷாஹீன் அஃப்ரிடி..!
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 31-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் , இன்றைய போட்டியின் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இடது கை பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பங்களாதேஷ் முதல் ஓவரிலேயே ஷாஹீன் அஃப்ரிடி தன்சித் ஹசனை எல்பிடபிள்யூவில் ஆட்டமிழக்க இதனால் வங்கதேசம் 0.5 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்த விக்கெட் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி படைத்தார். இந்த போட்டியில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டைகளை கைப்பற்றினார்.
ஷாஹீன் அஃப்ரிடி 51 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்தார். மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் இந்த சாதனையை செய்து இருந்தார். ஆகஸ்ட் 2016 இல் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் இந்த சாதனையை செய்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கின் 26 ஆண்டுகால சாதனையையும் ஷாஹீன் முறியடித்துள்ளார். 12 மே 1997 அன்று, குவாலியரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சக்லைன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஷாஹீன் அஃப்ரிடி 2018 ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பானபந்து வீச்சு மூலம் 102 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 105 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.