#INDvENG: ஆட்டநாயகன் விருதை தட்டிசென்ற புவனேஸ்வர் குமார்.. தொடரின் நாயகனான கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டியின் ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும், தொடரின் நாயகன் விருதை விராட் கோலி வாங்கினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி, 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 80 ரன்கள் விளாசினார். அதனைதொடர்ந்து ரோகித் சர்மா, 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடித்து 64 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், டக் அவுட் ஆக, பட்லருடன் டேவிட் மலன் இணைந்து அதிரடியாக ஆடி, அரை சதம் விளாசினார்கள். இவர்களின் கூட்டணியில் இங்கிலாந்து அணி 140 ரன்கள் குவிக்க, இதனை புவனேஸ்வர் குமார் பிரித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்து, அடுத்து வந்த வீரர்களால் ரன்கள் விரைவாக எடுக்க முடியவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமார் வாங்கினார். மேலும், தொடரின் நாயகன் விருதை விராட் கோலி தட்டி சென்றார். அதனைதொடர்ந்து ஒருநாள் போட்டி, வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.