கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!
தோனி தாமதமாக களமிறங்கி விளையாடுவது தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றிபெற்றாலும் கூட 155 ரன்கள் அடிக்கவே திணறி விளையாடி கடைசி நேரத்தில் தான் வெற்றிபெற்றது. அதன்பிறகு பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 196 ரன்களை சேஸிங் செய்து கொண்டிருந்தபோது தடுமாறி மொத்தமாகவே 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அதைப்போல, நேற்று குவஹாத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே, சென்னை அணியின் தோல்விக்கான காரணம் பற்றிய விமர்சனங்களும் பெரிதாக வெடித்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஏற்கனவே 7 மற்றும் 8-வது இடத்தில் இறங்குவதாக விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியையும், அதன் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியையும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை தெளிவாக எடுத்து விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதாவது 2020 முதல், சென்னை அணியின் பேட்டிங் வரிசையை நாம் எடுத்துக்கொண்டோம் என்றால் தோனி கீழ்நிலையில் (7 அல்லது 8வது இடத்தில்) இறங்குவது தெரியும். என்னை பொறுத்தவரை அவர் தாமதமாக இறங்குவதால் தான் அணியின் வெற்றி பாதிப்பதாக நான் நினைக்கிறேன். 2020 முதல் 2025 வரை, தோனி 67 இன்னிங்ஸ்களில் விளையாடி, 1,234 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் அவரது சராசரி 41.13 என்றாலும், அவர் பேட் செய்யும் பந்துகள் சராசரியாக 15-20 மட்டுமே.
இதனை வைத்து பார்த்தால் அவர் பேட்ஸ்மேனாக இருந்துகொண்டு அவருடைய திறமையை முழுவதுமாக பயன்படுத்தவில்லை. அணி பழையபடி சிறப்பான நிலைக்கு திரும்பவேண்டும் என்றால் தோனி விரைவாக வந்து விளையாடவேண்டும். சென்னை அணி கடந்த 2020-ஆம் ஆண்டு 7வது இடத்திலும், 2022ல் 9வது இடத்திலும் புள்ளி விவர பட்டியலில் இருந்தது. இந்த நிலைமைக்கு தோனியும் ஒரு காரணம் தான். 2023 முதல் 2025 வரை, தோனி 180-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார், ஆனால் அவர் 20 பந்துகளுக்கு மேல் ஆடியது வெறும் 4 இன்னிங்ஸ்களில் மட்டுமே.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், 182 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது, தோனி 7வது இடத்தில் இறங்கி 16 ரன்கள் எடுத்தார். அது போதுமா என்று கேட்டீர்கள் என்றால் நிச்சியம் போதாது என்று தான் சொல்வேன். அதைப்போல, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 167 ரன்கள் துரத்தியபோது, 9வது இடத்தில் இறங்கிய தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார், அணி 7 விக்கெட்டுகளால் தோற்றது. தோனி ஒரு சிறந்த பினிஷர் தான். ஆனால் அவரை 19 அல்லது 20வது ஓவரில் மட்டும் பயன்படுத்துவது மிகவும் தவறு.
தோனி 5 அல்லது 6வது இடத்தில் இறங்கினால், அவரால் ஆட்டத்தை மாற்றி அணிக்கு ரன்களை குவிக்க முடியும். அவருடைய திறமையை பயன்படுத்தலாம் அவரை லேட்டாக இறங்க வைத்தால் அணிக்கு ரன்கள் கிடைக்கும்” எனவும் விமர்சித்ததோடு மட்டுமின்றி சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அட்வைஸும் வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025