சாலை விபத்தில் சிக்கிய சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான்! நேர்ந்தது என்ன?
இளம் கிரிக்கெட் வீரரான முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான முஷீர் கான் தற்போது சாலை விபத்தை சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் அவருக்கு கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர்கில் தனது தந்தை நவுசத் கானுடன் லக்னோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது இந்த சாலை விபத்தானது ஏற்பட்டுள்ளது.
சாலையில் எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் முஷீர் கான் சென்ற கார் சாலையில் உருண்டதாகவும், அப்படி உருண்டதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். அதே நேரம் அவரது தந்தைக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அவரும் அவரது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முஷீர் கான் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைய 3 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
இதனால், இந்த ஆண்டு லக்னோவில் நடைபெற உள்ள இந்திய உள்ளூர் தொடரான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இவருக்கு இந்த தீடிர் சாலை விபத்தால் கிரிக்கெட் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.