SAvsIND : மாஸ் காட்டிய சஞ்சு சேட்டன்! முதல் டி20 போட்டியை வென்றது இந்திய அணி!
நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
டர்பன் : இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியானது நேற்று டர்பனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா அணி.
அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. வழக்கம் போல சேட்டன் சஞ்சு சாம்சனும, இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். தொடக்கத்தை அதிரடியாக அமைத்த சாம்சனுக்கு பக்கபலமாக இருந்த அபிஷேக் ஷர்மா எதிர்பாராத விதமாக 7 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய சூரியகுமார் யாதவ் சஞ்சு சம்சனுடன் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அதிலும் சஞ்சு மிக அதிரடியாக விளையாடினார். இருவரின் கூட்டணியில் இந்திய அணியின் ஸ்கோர் உச்சம் பெற்றது.
எதிர்பாராத விதமாக சூரியகுமார் யாதவ் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய ரசிகர்களுக்கு அது அதிர்ச்சி அளித்தது. ஆனாலும், அதிரடியில் சற்றும் மாற்றமில்லாமல் அவரை பின்தொடர்ந்து வந்த திலக் வர்மா நிகழ்த்தினார். மறுமுனையில் வான வேடிக்கை காட்டி வந்த சஞ்சு 44 பந்துக்கு சதம் அடித்து அசத்தினார்.
இதனால், டி20 கேரியரில் அடுத்தடுத்து 2 சதகங்கள் அடித்து அசத்தினார். கடந்த வங்கதேச அணியுடன் டி20 போட்டியில் சதம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரை பின் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என எந்த ஒரு வீரரும் சரி வர விளையாடாமல் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால், இறுதியில் இந்திய அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சேட்டன் சஞ்சு 107 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்க அணியில் கோட்ஸே 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இமாலய இலக்கை துரத்த பேட்டிங் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி. ஒரு பெரிய இலக்கை நோக்கி விளையாடும் போது அதற்கு ஏற்றவாறு பொறுமையாகவும், சமயம் பார்த்து அதிரடியாகவும் விளையாட வேண்டும்.
ஆனால், தென்னாப்பிரிக்கா அணி அதிரடியில் கவனம் செலுத்தி நிதானத்தை இழந்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது. அதன்படி, கேப்டன் மர்க்ரம் (8 ரன்கள்), அதிரடிக்கு பெயர் போன கிளாசென் (25 ரன்கள்), ஸ்டப்ஸ் (11 ரன்கள்) என எந்த வீரரும் சரிவர விளையாடாமல் சொதப்பினார்கள்.
இதனால், 17.5 ஓவர்கள் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட்டையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கிளாசன் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியை பொறுத்த வரை ரவி பிஷ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.
மேலும், 61 ரன்கள் வித்தியாசத்தில் நடைபெற்ற இந்த முதல் டி20 போட்டியை வென்று அசத்தியது இந்திய அணி. இதனால் 4 போட்டிகள் அடங்கிய தொடரை 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டியானது நாளை (நவ.-10) நடைபெறவுள்ளது.