6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?
சஞ்சு சாம்சன் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, நான்கு முதல் ஆறு வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்து சஞ்சு சாம்சன் கை விரலில் கடுமையாக தாக்கியது. இதனால், அவர் வலியால் துடித்த நிலையில் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது.
இதன்பின் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர், கீப்பிங் செய்யவில்லை. இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் 6 வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான கேரளாவின் வரவிருக்கும் ரஞ்சி டிராபி காலிறுதிப் போட்டியில் இருந்து விலக்கி வைக்கும்.
ஆனால், மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு பழைய நிலைமைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மீண்டும் பயிற்சியை முடித்த பிறகு, சஞ்சு தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் மீண்டும் பயிற்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அவர் மீண்டும் போட்டியில் விளையாட துவங்குவதற்கு முன், அவருக்கு NCA-வின் ஒப்புதல் தேவைப்படும்.
மோசமான பார்ம்
தற்போது, முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சஞ்சு சாம்சன் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். பங்களாதேஷ், தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் முதல் ஆளாக களமிறங்கி நல்ல ரன்களை குவித்திருந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் மோசமான ரன்கள் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பிசிசிஐ கூறுவது என்ன?
சஞ்சு சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் சரியான முறையில் விளையாடத் தொடங்குவதற்கு ஐந்து முதல் ஆறு வாரங்கள் ஆகும். எனவே பிப்ரவரி 8-12 வரை புனேவில் நடைபெறும் ரஞ்சி டிராபி காலிறுதிப் போட்டியில் கேரளாவுக்காக (ஜே&கே அணிக்கு எதிராக) அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.