சாம்சன் அதிரடி வீணானது.., போராடி டெல்லியிடம் தோற்ற ராஜஸ்தான் அணி..!
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர்.
தொடக்க வீரர்கள் இருவரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் கூட்டணி அமைத்து சற்று அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் சேத்தன் சகரியா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ராகுல் திவாட்டியா, கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் லியாம் 1, ஜெய்ஸ்வால் 5 ரன் எடுத்து பண்ட்டிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன் களமிறங்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மில்லர் 7 ரன் எடுத்து வெளியேறினார்.
அடுத்து களம்கண்ட ரியான் பராக் 2 , ராகுல் திவாட்டியா 9 , மஹிபால் லோமோர் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இப்போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே சற்று அடித்து விளையாடி அரைச்சதம் எடுத்து 70 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டெல்லி 16 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றது.