7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 217 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 218 ரன்கள் என்ற இலக்கில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் முதலில் களமிறங்கிய அமித் சாத்விக் 6 ரன்களில் வெளியேற, ஆகாஷ் சும்ரா பொறுப்பாக விளையாடினார்.
அதன்பின், களமிறங்கிய எஸ்.அரவிந்த்(17 ரன்கள்), மோகித் ஹரிஹரன்(14 ரன்கள்) ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் தங்களது விக்கெட்டை இழந்தனர். பின், கௌசிக் காந்தி 23 ரன்கள் எடுக்க சிலம்பரசன் வீசிய பந்தில், அவரிடமே கேட்ச் பிடிக்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் அட்னான் கான் அதிரடியாக விளையாடி 47 ரன்களை விளாசினார்.
முடிவில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அட்னான் கான் 47* ரன்களும், ஆகாஷ் சும்ரா 24 ரன்களும், கௌசிக் காந்தி 23 ரன்களும் குவித்துள்ளனர். சேப்பாக் அணியில் பாபா அபராஜித், ராக்கி பாஸ்கர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.