SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!
நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்தியா அணி, தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றதுடன் 3-1 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டுக்கடங்காத ஆக்ரோஷமாக விளையாடி இந்திய அணி மீண்டும் டி20 போட்டிகளில் ஒரு உலக சாதனை நிகழ்த்தியது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தை வெகு சிறப்பாகவே தொடங்கியது. துரதிஷ்டவசமாக அபிஷேக் ஷர்மா 36 ரன்களுக்கு அவுட் ஆகினார்.
ஆனால் அவர் அவுட்டாகிய பிறகே தென்னாப்பிரிக்கா அணிக்கு தலைவலி தொடங்கியது. 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க வீரரான சஞ்சுவும், திலக் வர்மாவும் இணைந்து கட்டுக்கடங்காத காட்டாறு போல மைதானத்தில் மாறி மாறி சிக்ஸர் வானவேடிக்கையை நிகழ்த்தினார்கள்.
மேலும், அவர்கள் அதிரடியாக விளையாடிய இருவரும் தங்களது சதத்தை பூர்த்தி செய்தனர். இதன் மூலம் ஒரே சர்வதேச டி20 போட்டியில் பேட்டிங் விளையாடும் ஒரு அணியில் இரண்டு வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இவர்களது அதிரடியில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலர்களும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர். அதில், சாம்சன் 56 பந்துக்கு 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துக்கு 120 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 20 ஓவருக்கு 283 என்ற இமாலய ரன்கள் எடுத்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் மற்றுமொரு பெரிய ஸ்கோர் இதுவாகும். முன்னதாக இதே வருடத்தில் வங்கதேச அணியுடன் 297 ரன்கள் எடுத்துருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணியில் சிமிலேன் 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 284 என்ற உச்ச இலக்கை எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய அணி போலவே அதிரடி காட்டவேண்டுமென்று தென்னாபிரிக்க அணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து கோட்டை விட்டனர்.
இதனால் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தென்னாபிரிக்க அணி மிக மோசமாக தடுமாறியது. ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த மில்லரும் ஸ்டப்ஸும் இணைந்து அவ்வப்போது பவுண்டடிகள் அடித்து, தட்டி தட்டியே ரன்களைச் சேர்த்தது. முடிந்த வரை அவர்களும் அதிரடியாக விளையாடினார்கள்.
ஆனால், அது தென்னாப்பிரிக்க அணிக்கு கைகொடுக்கவில்லை. அதில், மில்லர் 36 ரன்களுக்கும், ஸ்டப்ஸ் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, பேட்ஸ்மேன்கள் இல்லாததன் காரணமாகவும், ரன்கள் அதிகம் இருந்ததாலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியின் விழும்புக்குச் சென்றது.
இதனால், இறுதியில் 18.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 148 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷதீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
இதனால், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.