SA vs IND : பவுலர்களைப் பந்தாடிய திலக் வர்மா! தொடரில் முன்னிலைப் பெற்று இந்திய அணி அபாரம்!
நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், 2-வது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அதே போல இந்த போட்டியிலும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய திலக் வர்மாவும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடியாக விளையாடினார்கள். சமீபத்திய போட்டிகளில் சரிவர விளையாடாத அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். சரியாக 50 ரன்கள் எடுத்திருந்த போது அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்து பெவிலியின் திரும்பினார்.
அதன் பிறகு களத்தில் இருந்த திலக் வர்மா தனி ஆளாக நின்று போட்டியை இந்திய அணியின் பக்கம் மாற்றினார். அவரது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் உச்சம் பெற்றது. மேலும், தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த அவர், தனது முதல் சர்வதேச டி20 சதத்தையும் பூர்த்தி செய்தார்.
அவருடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ரின்கு சிங் ஆகிய முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்தனர். இறுதியில் களமிறங்கிய ரமந்தீப் சிங் 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் பேட்டிங் பிடித்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக சிமெலேன் மற்றும் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முற்பட்ட தென்னாப்பிரிக்க அணி, முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
இதனால், அவ்வப்போது கிடைக்கின்ற பந்தை மட்டுமே அந்த அணி பவுண்டரிக்கு விளாசியது. அதன்படி, முக்கிய வீரர்களான ரியான் ரிக்கல்டன் 20 ரன்கள், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 21 ரன்கள், ஐடன் மார்க்ரம் 29 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பிறகு, க்ளாஸென் மற்றும் மில்லர் இருவரும் களத்திலிருந்து போராடினார்கள். க்ளாஸென் தனக்கு வாய்ப்பாக அமைந்த பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசி இந்திய அணிக்கு பயத்தை காட்டினார். இருப்பினும், ரன்கள் அதிகமாக இருப்பதால் அடித்து ஆடவேண்டிய நிலைக்கு தென்னாப்பிரிக்க அணி இருந்து வந்தது.
ஆனாலும், களத்தில் இருந்த வீரர்கள் சற்றும் தளராமல் போராடினார்கள். இருப்பினும், இக்கட்டான நிலையில் மில்லர் 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க தென்னாப்பிரிக்க அணி தோல்வியின் விழும்பிற்கு தள்ளப்பட்டது. ஆனால், கடைசியாக வந்த தென்னாப்பிரிக்க வீரரான யான்சென் இந்திய அணியின் பவுலர்களை துவம்சம் செய்தார்.
ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்நோய், அர்ஷிதீப் சிங் உள்ளிட்ட பவுலர்கள் பந்து வீச்சை மைதானத்தில் நாலாபக்கமும் சிதறிடித்தார். 5 சிக்ஸர்கள் 4 ஃபோர்கள் அடித்த யான்சென் வெறும் 15 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
இதனால், இந்திய அணியை ஒரு வகையில் ஆட்டம் காணவைத்தார் என்றே கூறலாம். ஆனால், கடைசி ஓவரில் அர்ஷிதீப் சிங்கின் அபார பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அதிலே, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில், 20 ஓவர்கள் பிடித்த தென்னாப்பிரிக்க அணி 208 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷதீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றது. மேலும், 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என முன்னிலை பெற்று வருகிறது. இந்த தொடரின் அடுத்த போட்டியானது நாளை மறுநாள் (நவ.-15) நடைபெறவுள்ளது.