ஸ்மித்தை வறுத்தெடுத்த தென் ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!
தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என, ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, அவுட்டாக்கிய ரபாடா அவரது தோள் மீது உரசி ஆர்ப்பரித்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரபாடாவுக்கு அடுத்த இரண்டு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. இது குறித்து தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் ‘டுவிட்டரில்’ செய்தி வெளியிட்டுள்ளார்.
இதன் விவரம்: இரண்டாவது டெஸ்டில் ரபாடாவின் தோள் மீது உரச, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் முதலில் நெருங்கி வந்தார். இதற்கான, ‘வீடியோவை’ பார்த்தாலே இது நன்கு தெரியும். கால்பந்தில் ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு பெற, தந்திரமாக செயல்படுவதை போல ஸ்மித்தின் நடவடிக்கை இருந்தது. இவருக்கு குற்ற உணர்ச்சி இல்லையா. இவ்வாறு அதில் பிலாண்டர் தெரிவித்து இருந்தார்.
இது கிரிக்கெட் அரங்கில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நேரம், பிலாண்டர் மீண்டும் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,’ காலை வணக்கம் நண்பர்களே. எனது ‘டுவிட்டர்’ கணக்கை யாரோ ‘ஹேக்’ செய்திருந்தனர். தற்போது, சரியாக விட்டது,’ என, தெரிவித்துள்ளார்.இரண்டாவது டெஸ்டில் 11 விக்கெட் சாய்த்த ரபாடா, அடுத்த இரண்டு போட்டியில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால், தென் ஆப்ரிக்கா அணி, ரபாடா தடையை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ‘அப்பீல்’ செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.