IPL 2024 : கேப்டனாக வெற்றியை தொடரும் ருதுராஜ் கெய்க்வாட் ..!
IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தான் கேப்டனாக களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக தனது வெற்றி பயணத்தை கனக்கச்சிதமாக தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த கருத்து படி பார்க்கும் போது மிகவும் சிறப்பான ஒரு கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. இவர் 2019-ல் சென்னை அணிக்காக 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டார், ஆனால் அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு 2020-ல் சென்னை அணிக்கு களமிறங்கிய கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து 3 அரை சதங்களை விளாசி அசத்தினார்.
அதனை தொடர்ந்து 2021 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் அதிக ரன்கள் அடித்து ஆரஞ் தொப்பியையும் தட்டி சென்றார். அந்த ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக வெல்வதற்கு பெரும் பங்களிப்பை அளித்திருந்தார். 2021 -2022 ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடியாக விளையாடி அந்த தொடரில் 603 ரன்களை குவித்தார்.
அதன் பிறகு கடந்த வருடம் ஆசிய விளையாட்டு தொடரில் இளம் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று தங்க பதக்கத்தை தட்டி தூக்கினார். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் சிஎஸ்கே நிர்வாகமும், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்பது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.