ருதுராஜ், கான்வே அதிரடி பேட்டிங்..! குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல்-இன் முதல் தகுதிச்சுற்று CSK vs GT போட்டியில், முதலில் பேட் செய்த சென்னை அணி 172/7 ரன்கள் குவிப்பு.
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஜோடி அணிக்கு நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில், 60 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், கான்வே பொறுப்பாக விளையாட, அதன்பின் களமிறங்கிய சிவம் துபே, ரஹானே பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பொறுப்பாக விளையாடிய கான்வே (40 ரன்கள்) தனது விக்கெட்டை இழக்க, அம்பதி ராயுடு 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி(1 ரன்) ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்.
இறுதிவரை களத்தில் நின்ற ஜடேஜாவும் ஆட்டமிழக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், கான்வே 40 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.