#RRvCSK: ருதுவின் ருத்ரதாண்டவம், ஜடுவின் தாறுமாறு…. சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் ஆகியோர் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் 25 ரன்களில் டு பிளெசிஸ் தனது விக்கெட்டை இழக்க, சுரேஷ் ரெய்னா மீண்டும் ஏமாற்றத்தை அளித்தார். இதன் பின் மொயீன் அலி சில அதிரடி ஷாட்டுகளை அடித்து, 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து ராயுடு வெளியேற, ஒருபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் நிதானம் மற்றும் அதிரடியாக விளையாடி அரை சத்தத்தை கடந்தார். இதையடுத்து தொடர்ந்து சிக்ஸர் அடித்து ருதுராஜ் தனது முதல் சத்தத்தை அதிரடியாக பூர்த்தி செய்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அதிக ரன்கள் அடித்த வீரரும் ஆவார்.
இவருடன் சேர்ந்து ஜடேஜா அசத்தலாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.