RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது..

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை களத்தில் நின்று 47 பந்தில் அதிகபட்சமாக 75 ரன்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், ரியான் பராக் 30 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகி வெளியேறினர். ஹெட்மையர் 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். துருவ் ஜூரல் சற்று நிலைத்து 35 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் நின்றார் .
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. RCB அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடுத்து களமிறங்கியது.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 33 பந்தில் 5 பவுண்டரி 6 சிக்ஸர் அதிரடியாக விளாசி 65 ரன்கள் எடுத்தார். அடுத்து விராட் கோலி 45 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். படிக்கல் 28 பந்தில் 40 ரன்கள் எடுத்து இருவரும் இறுதிவரை களத்தில் இருந்து RCB அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில், 17.3 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. கடந்த ஏப்ரல் 10இல் டெல்லி அணி போட்டியின் தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் அணியை வீழ்த்தி RCB வெற்றி பாதையில் திரும்பியுள்ளது.