சாதனை மேல் சாதனை.! சச்சினை முந்திய ‘ஹிட்’மேன் ரோஹித்! தோனி, கோலிக்கு அடுத்து இவர்தான்..,
30 வயதை கடந்து அதிக சதங்கள் அடித்தவர்கள் லிஸ்டில் சர்வதேச அளவில் ரோஹித் முதலிடம் பிடித்துள்ளார். 50 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை அவர் வழிநடத்தியுள்ளார்.

கட்டாக் : ஃபார்முக்கு வாங்க, ஃபார்முக்கு வாங்க என ரோஹித்தின் ஒரிஜினல் ஆட்டத்தை காண எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும். தனது அட்டகாசமான பேட்டிங்கால் இந்தியாவை வெற்றி பாதைக்கு மிக இயலாக நகர்த்திவிட்டார் நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டம், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில். நீண்ட மாதங்களாக சரியான ஃபார்மில் இல்லாமல் ஒற்றை இலக்கம் , சொற்ப ரன்கள், தவறான ஷாட்கள் என பெவிலியன் திரும்பி கொண்டிருந்த ரோஹித் இந்த ஆட்டத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அடுத்து வரப்போகும் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.
பலரும் எதிர்பார்த்தது போலவே நிலைத்து ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஆட்டம் காண வைத்து பல்வேறு சாதனைகளையும் தனதாக்கியுளளார் ரோஹித் சர்மா. 50 ஓவர்களில் 30 ஓவர்கள் நின்று 90 பந்தில் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 12 பவுண்டரிகள் கடந்து 119 ரன்கள் விளாசினார்.
அதிக சிக்ஸர்கள் :
இந்த போட்டியில் ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் லிஸ்டில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி 398 போட்டிகள் விளையாடி 351 சிக்ஸர்கள் உடன் உள்ளார். ரோஹித் 267 போட்டிகளிலேயே 338 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 301 ஒருநாள் போட்டிகளில் 331 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சச்சினை முந்திய ரோஹித் :
30 வயதை கடந்த பிறகு அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 30 வயதை கடந்த பிறகு ரோஹித் 36 சதங்களை அடித்துள்ளார். அவருக்கு தற்போது வயது 37 ஆகிறது. சச்சின் தனது 30 வயதுக்கு பிறகு 30 சர்வதேச சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இச்சாதனையில் டிராவிட் 26-ம், விராட் கோலி 18 சதங்களும் அடித்துள்ளனர்.
அதேநேரம் சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 30 வயதை கடந்து அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா 21 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தோனி, கோலிக்கு அடுத்து ரோஹித் :
கேப்டனாக ரோஹித் சர்மா, நேற்றோடு 50 ஒருநாள் போட்டிகளை கடந்துள்ளார். மேலும் ரோஹித் தலைமையில் 62 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது. முதல் இடத்தில், 200 ஒருநாள் மற்றும் 72 டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி M.S.தோனி உள்ளார். அவரது தலைமையில், இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை , சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2ஆம் இடத்தில், 95 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய விராட் கோலி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி பட்டத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.