பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!
இந்த சீசனில் ரோஹித் சர்மா ஆறு போட்டிகளில் 0, 8, 13, 17, 18 போன்ற குறைவான ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக இருப்பது போல அணியின் முக்கிய வீரராக திகழும் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மேலும் ஒரு சோகமான விஷயமாக உள்ளது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 0, 8, 13, 17, 18 போன்ற குறைவான ரன்களே எடுத்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இவர் ரன்கள் குவித்தால் மட்டும் தான் மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும். ஆனால், இவர் தொடர்ச்சியாக இப்படி விளையாடி வருவதால் பவர்பிளேயில் ரன்கள் அடிக்க முடியாமல் மும்பை அணியும் திணறுகிறது. எனவே, ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்ம் குறித்து விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் ரோஹித் ஷர்மாவை ஓப்பனிங்கில் இருந்து தூக்கவேண்டும் என மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அஞ்சூம் சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” பொதுவாகவே அணியில் ஒரு வீரர் பார்மில் இல்லை என்றால் அது பெரிய விஷயம் இல்லை. எல்லா அணிகளிலும் நடப்பது தான். ஆனால், அப்படி பார்மில் இல்லாத போது அந்த வீரர் இறங்கி ரன்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு பதிலாக அந்த இடத்தில் வேறு வீரரை இறக்கிவிட்டு அதற்கு பிறகு அவரை களமிறக்கி விளையாட வைத்து பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் ரோஹித் ஷர்மாவுக்கு பார்ம் சரியில்லை.
எனவே, அவரை தொடக்க ஆட்டக்காரக இறங்க வைப்பதற்கு பதிலாக அதற்கு அடுத்த இடத்தில் இறக்கி விளையாட வைத்து பார்க்கலாம். தொடக்கத்தில் இறங்கி அவருடைய பேட்டிங்கில் இருந்து ரன்கள் வரவில்லை என்பது தான் அணிக்கு பாதிப்பாக உள்ளது. எனவே, ரோஹித்தை கீழே இறக்குவது அவருக்கு அழுத்தத்தைக் குறைத்து, மீண்டும் ஃபார்ம் பெற உதவலாம்” எனவும் தெரிவித்தார்.