விலகிய ரோஹித் சர்மா? கேப்டனாக பொறுப்பேற்கும் ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக நம்பதக்க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்த தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமுடியாமல் போன நிலையில், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியும் பெற்றது. அதன் பிறகு இரண்டாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா அணியை தலைமை தாங்கிய நிலையில், தொடர்ச்சியாக அணி 3 போட்டிகள் தோல்வியை சந்தித்துள்ளது.
அத்துடன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, இன்று காலை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் ” ரோஹித் சர்மா இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ரோஹித் நாளை விளையாடும் அணியில் இருப்பாரா இல்லையா என்பது பற்றி விக்கெட்டை பார்த்துவிட்டு நாங்கள் தேர்வு செய்வோம். பின்னர் விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியீடுவோம்” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்களின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் ரோஹித் தான் விலகுவதற்கான தனது முடிவை தெரிவித்ததாகாவும், அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.