தோனி, கோலி வரிசையில் மோசமான சாதனையில் இடம்பிடித்த ரோஹித் சர்மா!
தோனி , கோலிக்கு அடுத்து தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபரா வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டிக்கு பும்ரா தலைமை ஏற்றிருந்தார். ரோஹித் சர்மா அந்த போட்டியில் விளையாடவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்கினார். இதில் முதல் இரண்டாம் இன்னிங்சில் 180 மற்றும் 175 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டி மூலம் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த கேப்டன்கள் என்ற வரிசையில் இணைந்துள்ளார். இதில் முதல் இடத்தில் MAK பட்டோடி என்பவரின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி 1967 – 1968 காலகட்டத்தில் தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது
அடுத்து, சச்சின் டெண்டுல்கர் தலைமையில் 1999இல் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்வியை தழுவியது. அடுத்தது, M.S.தோனி தலைமையில் 2011இல் ஒரு முறையும் 2014இல் ஒரு முறையும் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் தலைமையில் 2020-2021இல் தொடர்ந்து 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா தற்போது இணைந்துள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்வியுடன் தொடர்ந்து 4 தோல்விகளை தழுவியுள்ளது.
அதே போல, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிக குறைந்து பந்துகளை எதிர்கொண்ட டெஸ்ட் போட்டியாக இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் 2வது டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் 1,031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன.
மேலும், இந்த வருடம் விராட் கோலியும் ரோஹித்தும் தங்களது குறைந்த பேட்டிங் சராசரியுடன் விளையாடி வருகின்றனர். இந்தாண்டில் (2024) கோலி 16 இன்னிங்ஸ்களில் 26.64 சராசரியுடன் 373 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் 23 இன்னிங்ஸில் 27.13 சராசரியில் 597 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.