இது நல்லா இருக்கே! உள்ளூர் போட்டியில் ரோஹித் மற்றும் கோலி? கம்பீர் அதிரடி முடிவு!
மும்பை : இந்திய அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பிறகு அடுத்ததாக வரும் செப்டம்பர்-19ம் தேதி வங்கதேச அணியுடனான தொடருக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வகையிலான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி இருவரும் உள்ளூர் தொடரான துலிப் ட்ராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக முடிவு செய்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த முடிவை பயிற்சியாளரான கம்பீரின் பரிந்துரையில் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான இவர்கள் ஏற்கனவே தங்களது விளையாட்டின் திறனை நிரூபித்து பல சாதனைகளை தற்போதும் நிகழ்த்தி வருகின்றனர். மேலும், அவர்களது அனுபவத்தின் மூலம் தங்களால் உள்ளூர் போட்டிகள் அல்லாமல் முக்கியப் போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற முடியும் எனவும் நிரூபித்து உள்ளனர்.
அப்படி இருக்கையில் இந்திய அணியின் புதியப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இந்திய அணியின் வீரர்களை துலிப் ட்ராபியில் விளையாட வேண்டும் என பரிந்துரைச் செய்திருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
இந்திய அணியில் ரோஹித், விராட் மட்டும் அல்லாமல் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குல்தீப் யாதவ் என பிற வீரர்களும் துலீப் ட்ராபி தொடரில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அதிலும் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவிற்கு மட்டும் விளக்கு அளித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
இந்திய அணியின் மூத்த வீரர்காளான ரோஹித், கடந்த 2015-ம் ஆண்டு கடைசியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். அதே போல கோலியும் கடந்த 2012-ம் ஆண்டு தான் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு இருவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. தற்போது, கம்பீரின் பரிந்துரையால் இருவரும் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் களம் காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.