ENGvsAUS : திருப்பி கொடுத்த இங்கிலாந்து! லிவிங்ஸ்டோன் அதிரடியில் அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
கார்டிஃப் : நடைபெற்ற 2-வது டி20I போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருந்தது.
நேற்று இந்த தொடரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சார்ட்டும், ஹெட்டும் கூட்டணி அமைத்து அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்தனர்.
ஆனால், ஆஸி. அணி 50 ரன்கள் கடந்ததும், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கோட்டை விட்டனர். இருப்பினும் அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (50 ரன்கள்), ஜோஷ் இங்கிலிஸ் (42 ரன்கள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரின் ஆக்ரோஷமான விளையாட்டால் ஆஸ்திரேலிய அணி 160 ரன்களை விரைவாக கடந்தது.
இறுதியில், ஆரோன் ஹார்டியின் 9 பந்துக்கு 20 ரன்கள் என்ற அதிரடியான கேமியோவால் 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 193 நண்பர்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ், லிவிங்ஸ்டோன் இருவரும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 194 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது.
ஓப்பனர்களாக களமிறங்கிய சாலட்டும், வில் ஜாக்ஸ்சும் நிலைத்து ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். இதனால், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் விரைவாக இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு லிவிங்ஸ்டோனும், ஜேக்கப் பெத்தேலும் இணைந்து மிக சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அதில் ஆக்ரோஷமாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 47 பந்துக்கு 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 24 பந்துக்கு 44 ரன்கள் எடுத்தார். இருவரும் நல்ல ஒரு ஸ்கோரை செட் செய்து ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியில் 19 ஓவரிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 194 இலக்கை எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியில் மத்தேயு ஷார்ட் மட்டும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் அதுவும் கைகொடுக்காமல் போனது. இதனால், 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை இங்கிலாந்து 1-1 என சமன் செய்துள்ளது. மேலும் அடுத்த டி20 போட்டியானது வரும் செப்-15ம் தேதி நடைபெற இருக்கிறது.