‘ஒழுங்கா விளையாடலயா ரிட்டையர் ஆகிருங்க’! ரோஹித்-கோலியை சாடிய இந்திய முன்னாள் வீரர்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் நன்றாக விளையாடவில்லை என்றால் ஓய்வு பெற்று விடுங்கள் என இந்திய முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்தியா அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட முடியும்.
கடந்த நியூஸிலாந்து அணியுடனான தொடரில், தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது தான். குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பார்ம் மிகவும் மோசமாக இந்த தொடரில் அமைந்தது.
இதனால் ரசிகர்களும் அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், இந்த கடைசி போட்டி முடிவடைந்த பின் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இந்த தொடரில் நடந்த தவறுகளை நாங்கள் திருத்த வேண்டும் குறிப்பாக நானும் விராட் கோலியும் எதில் தவறு செய்தோமோ அதை சரி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கர்சன் காவ்ரி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் விமர்சித்து பேசி இருக்கிறார். இது குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பேசிய போது, “ஆஸ்திரேலியா உடனானத் தொடரில், அவர்கள் இருவரும் பெரிய ஸ்கோர் எடுத்தே ஆக வேண்டும்.
அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் தங்கள் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவிக்க வேண்டிய நேரம் இது. ஆம், ஆஸ்திரேலியாவில் அவர்கள் விளையாடவில்லை என்றால், விராட் மற்றும் ரோஹித் ஓய்வு பெற வேண்டும்.
அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?’’ எனக் கர்சன் காவ்ரி கூறியுள்ளார்.