RCBvsKKR: அடித்து நொறுக்கிய கொல்கத்தா..! திணறிய பெங்களூரு..வெற்றிக்கொடி ஏற்ற இதுவே இலக்கு…
ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 200/5 குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். ஜெகதீசன் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி பொறுப்பாக விளையாடினார். பின்னர், அவரும் தனது விக்கெட்டை இழக்க அணியின் கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்தார். அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியில் ரிங்கு சிங் மற்றும் டேவிட் வைஸ் களத்தில் இருக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும், ஜெகதீசன் 27 ரன்களும் குவித்துள்ளனர். பெங்களூரு அணியில் வனிந்து ஹசரங்க மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.