RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!
ராஜஸதன் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிலிப் சால்ட் 26 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள் அடித்து 70 ரன்கள் விளாசினார்.
படிக்கல் 27 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் RCB அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இறுதியில் டிம் டேவிட் 23 ரன்களும் (கடைசி பந்தில் ரன் அவுட்), ஜிதேஷ் சர்மா 20 ரன்களும் அடித்தனர்.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஹஸில்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். வைபவ் சூர்யவன்சி 16 ரன்னில் அவுட் ஆகினார்.
கேப்டன் ரியான் பராக் 22 ரன்னில் அவுட் ஆகினார். நிதிஷ் ராணா 28 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ஹெடமையர் 11 ரன்னில் அவுட் ஆகினார். துருவ் ஜூரல் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து 19வது ஓவரில் அவுட் ஆகினார். ஷுபம் துபே 12 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டது.
இந்த ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி கண்ட பிறகு 4வது போட்டியான இன்று முதல் வெற்றியை ருசித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.