#RCB v CSK: விராட், படிக்கல் அதிரடி…157 ரன்கள் அடித்தால் சென்னை வெற்றி!
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 156 ரன்கள் குவிப்பு.
இன்று ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசியதால் இப்போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் தங்களது அரைசதத்தை விக்கெட் இழப்பின்றி பூர்த்தி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து 41 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்த விராட், பிராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து வந்த மற்றுமொரு அதிரடி வீரரான மிஸ்டர் 360 டிகிரி ஏபி டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து, 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த படிக்கல் அடுத்த பந்திலேயே பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 50 பந்துகளில் 70 ரன்களை விளாசியுள்ளார். அடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல் சில ஷாட்டுகள் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், டிம் டேவிட்டும் தீபக் சாகர் ஓவரில் வெளியேறினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 157 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது.
சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய டுவைன் பிராவோ 3, ஷர்துல் தாக்கூர் 2, தீபக் 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெரிய ஸ்கொர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி விக்கெட்டை எடுத்ததை தொடர்ந்து, சென்னை பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளனர்.