‘RCB இப்போவும் தப்பு தான் பண்ணிருக்காங்க ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங்
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார்.
பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசும் போது கூறினார்.
அவர் பேசுகையில், “பெங்களூரு அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் அணியில் மீண்டும் மீண்டும் அவர்கள் தவறு செய்து கொண்டே வருகிறார்கள். பெங்களூரு அணி பேட்டிங்கில் அதிக முதலீடு செய்து பேட்ஸ்மேன்களை மட்டும் வாங்குகிறார்கள். ஆனால் அது போதாது எந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களை நன்றாக தேர்வு செய்கிறார்களோ அதே போல நல்ல பவுலர்களையும் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும். பெங்களுரு அணிக்கு பந்துவீச்சு தான் எப்போதுமே பலவீனமாகவே இருந்து இருக்கிறது.
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறது, அது தெளிவாகத் தெரிகிறது. பெங்களூரு அணி முதல் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரி, 180 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். மேலும் 180 ஸ்கோரை சேசிங் செய்வதற்கும் ஒரு அணியாக கூட்டாக செயல்பட வேண்டும்.
மேலும், அவர்கள் ஒரு சில நல்ல பந்துகளை வீசினாலே போதுமானது, அந்த ஒரு சில பந்தையும் எதிர்த்து யார் விளையாடினாலும் அந்த பந்து அவர்களது விக்கெட்டை எடுக்க வேண்டும். அந்த அளவிற்கு பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் மனநிலையை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஒழுக்கமான ஓவரை வீசுவதன் மூலம் அதிக விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்வதனால் பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்புகள் கூடும்”, என்று ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறினார்.